search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டவிரோத குடியேறிகள்"

    • சுராசந்த்பூர் மாவட்டத்தில் கலவரத்தின்போது 7 மியான்மர் நாட்டவர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
    • பயோமெட்ரிக் தரவுகளை சேகரிக்கும் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

    இம்பால்:

    மணிப்பூரில் இரு சமூகங்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. மே 3ம் தேதி ஆரம்பித்த வன்முறையின் தாக்கம் இன்னும் ஓயவில்லை. தொடர்ந்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன. இந்த வன்முறையுடன் போதைப்பொருள் பயங்கரவாதம், மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள், காடுகளில் நடக்கும் போதைப்பொருள் சாகுபடி, கடத்தல் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்புபடுத்தப்படுகின்றன.

    இந்நிலையில், மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பயோமெட்ரிக் தரவுகளை மணிப்பூர் அரசு சேகரிக்கத் தொடங்கி உள்ளது.

    இதுதொடர்பாக மணிப்பூர் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத மியான்மர் குடியேறிகளின் பயோமெட்ரிக் தரவுகள் முழுமையாக பெறப்படும்வரை அனைத்து மாவட்டங்களிலும் பயோமெட்ரிக் இயக்கம் தொடரும். இப்பணிகளை செப்டம்பர்  மாதத்திற்குள் முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டவிரோத மியான்மர் குடியேறிகளை அடையாளம் கண்டு அவர்களின் பயோமெட்ரிக் தரவுகளை பெறுவது குறித்து மாநில அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் குழுவை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது என்று உள்துறை இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, பயோமெட்ரிக் தரவுகள் சேகரிக்கும் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்கும்படி மணிப்பூர் மற்றும் மிசோரம் அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

    குகி சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கும் மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் கலவரத்தின்போது 7 மியான்மர் நாட்டவர், தோட்டா மற்றும் வெடிமருந்தினால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

    காடுகள் அழிப்பு, போதைப்பொருள் சாகுபடி மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு மியான்மர் குடியேறிகளே காரணம் என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

    லிபியாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 174 பேர் தாங்களாக முன்வந்து சொந்த நாடான நைஜீரியாவுக்கு திரும்பி உள்ளனர். #MigrantsDeported #Libya
    திரிபோலி:

    வறுமை, உள்நாட்டு சண்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மக்கள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்து வருகின்றனர். இதற்காக ஆபத்தான மத்திய தரைக்கடல் பகுதியில் படகுகளில் பயணிக்கும்போது விபத்தில் சிக்குகின்றனர். அவர்களை லிபிய பாதுகாப்பு படையினர் மீட்டு தங்கள் பகுதிக்கு கொண்டு வந்து முகாம்களில் தங்க வைக்கின்றனர்.

    அதேபோல் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சிக்கும் நபர்களும் கைது செய்யப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இதனால், லிபியாவில் உள்ள தடுப்பு முகாம்கள் மற்றும் நிவாரண முகாம்கள் நிரம்பி வழிந்தன.



    இதையடுத்து, லிபியாவில் சிக்கித் தவிக்கும் சட்டவிரோத குடியேறிகள் தாமாக முன்வந்து சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை குடியேறிகள் தொடர்பான சர்வதேச அமைப்பு (ஐஓஎம்) செய்தது. இதன்மூலம் பலர் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

    அவ்வகையில் நேற்று நைஜிரியாவைச் சேர்ந்த 174 பேர் லிபியாவில் இருந்து தாயகம் திரும்பியதாக ஐஓஎம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 32 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியேறிகள் ஐரோப்பிய ஒன்றிய அறக்கட்டளை நிதி உதவி பெற்று தங்கள் நாடுகளுக்கு திரும்பி உள்ளதாகவும் ஐஓஎம் கூறியுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியேறிகளை அவர்களின் நாடுகளுக்கு ஐஓஎம் திருப்பி அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. #MigrantsDeported #Libya

    சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களை குடும்பத்தோடு கைது செய்து சிறையில் அடைக்கும் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக 45 சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். #TrumpImmigrantPolicy
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

    குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியது.

    இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் தொடக்கம் வரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடியேறிகள் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களுடன் வந்த சுமார் 2,300 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வந்ததை அடுத்து, குழந்தைகளை அகதிகளிடம் இருந்து பிரிக்கும் உத்தரவை டிரம்ப் ரத்து செய்தார். இருப்பினும், இன்னும் பல குழந்தைகள் பெற்றோருடன் ஒப்படைக்கப்படவில்லை. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 10 நாட்களுக்குள் குழந்தைகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



    இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகளை குடும்பத்தோடு கைது செய்து தடுப்புக்காவலில் வைக்கும் நடமுறையை முடிவுக்கு கொண்டு வர அனைத்து மாநிலத்திலும் உள்ள 45 சட்ட அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

    சட்டவிரோத குடியேறிகளை குடும்பத்தோடு கைது செய்து காவலில் வைத்திருப்பதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதோடு அரசுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படுவதால் இந்த நடவடிக்கைக்கு முடிவு கட்ட வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    கைது நடவடிக்கைக்கு பதிலாக, ஒரு குடும்பத்தினர் சட்டவிரோதமாக குடியேறுகிறார் என்றால், குடும்ப தலைவரின் கையில், ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் அடங்கிய கருவியை பொருத்திவிட்டால், அந்த குடும்பத்தை எளிதாக கண்காணிக்க முடியும் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக குடியேறிகள் குடும்பத்தோடு கைது செய்யும் நடவடிக்கையை ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியினரும் எதிர்த்து கடிதம் எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    மெக்சிகோவில் இருந்து எல்லை தாண்டி சட்டவிரோதமாக அமெரிக்கா வருபவர்கள் மனிதர்கள் இல்லை விலங்குகள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். #Trump
    வாஷிங்டன்:

    மெக்சிகோவில் இருந்து எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் வருபவர்களை தடுக்க தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. தீவிர கண்காணிப்பையும் மீறி உள்ளே நுழைபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுகின்றனர். இதையும் தாண்டி பலர் அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர்.

    இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டம் ஒன்றில் அதிபர் டிரம்ப் பேசுகையில், “சட்டவிரோதமாக மக்கள் நாட்டிற்கு வருவதை வர முயற்சிப்பதை நாம் வெகுவாக நிறுத்தி இருக்கிறோம். அப்படி வருபவர்களை  நாட்டை விட்டு வெளியேற்றுகிறோம். இந்த மக்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று நீங்கள் நம்பமாட்டீர்கள். இவர்கள் மக்கள் அல்ல  விலங்குகள்” என கூறினார்.

    மேலும், “ பலவீனமான சட்டங்களின் காரணமாக அவர்கள் நாட்டிற்குள் விரைந்து வருகிறார்கள். நாம் பிடிக்கிறோம், விடுதலை செய்கிறோம் மீண்டும் பிடிக்கிறோம், மீண்டும் அவர்களை விடுதலை செய்கிறோம் இது பைத்தியக்காரத்தனம். முட்டாள்தனமான சட்டங்களால் நாட்டில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் வருகை அதிகரிக்கிறது. அமெரிக்காவிற்கு  சட்டபூர்வமாக மற்றும் தகுதி அடிப்படையில் மக்கள் வர வேண்டும்” என அவர் பேசியுள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் இருந்து குடியேறிவர்களை கெட்ட வார்த்தை பயன்படுத்தி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. #Trump
    ×